வடமாநிலங்களில் வாட்டும் குளிர்: நெருப்பை மூட்டி குளிர் காயம் மக்கள்...!
ராஜஸ்தானில் கடும் குளிர் நிலவும் நிலையில் சிரு பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடக்கு மாநிலங்களில் குளிர்காற்று கடுமையாக வீசி வருகிறது. இதனால் சாலையில் மூடுபனி அதிகமாகக் காணப்படுகிறது. மூடுபனியின் அடர்த்தியின் காரணமாகச் சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாகவும் முகப்பு விளக்குகளை எரியவிட்டுக்கொண்டும் செல்கின்றன.
அதே சமயத்தில் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் அரியானா என நான்கு மாநிலங்களில் குளிர் அலை வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட இந்தியாவில் நிலவும் பனிப்பொழிவின் காரணமாக காலையில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பனிப்பொழிவின் காரணமாக விமானங்கள் தாமதிப்பதையும் ரத்து செய்யப்படுவதையும் பயணிகளுக்கு உடனடியாக தெரிவிக்க ஏர் இந்தியா நிறுவனம் பயணிகள் சேவை மையத்தை துவக்கியுள்ளது.
உத்தரபிரதேசம் மொராதாபாத்தின் சில பகுதிகளை அடர்ந்த மூடுபனி சூழ்ந்து காணப்படுவதால் பல பகுதிகளில் இருள் போன்று சூழ்ந்து காணப்படுகிறது.
, மொராதாபாத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 ° C மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 18 ° C ஆக இருக்கும், அதே நேரத்தில் அடர்த்தியான மூடுபனி தொடருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.