லால்பாக் பூங்காவில் குடியரசு தினவிழா மலர் கண்காட்சி

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினவிழா மலர் கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-20 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினவிழா மலர் கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

மலர் கண்காட்சி

கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி 213-வது மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று லால்பாக்கில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் கண்காட்சியை நேரில் பார்த்து ரசித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குடியரசு தினவிழா மலர் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளேன். ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் இந்த மலர் கண்காட்சியை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். லட்சக்கணக்கானோர் இந்த கண்காட்சியை காண்பார்கள். இந்த முறை சுமார் 15 லட்சம் பேர் கண்காட்சியை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு தேவையான வசதிகளை தோட்டக்கலைத்துறை செய்துள்ளது.

பசுமை பகுதிகள்

இந்த மலர் கண்காட்சி மூலம் நமது மலர், தோட்ட வளங்கள் எவ்வளவு பெரியது, மாறுபட்டது என்பது மக்கள் தெரிந்துகொள்வார்கள். நமது மரக்கன்றுகள், மலர், தோட்ட வளத்தை அதிகப்படுத்துவது தான் எங்களின் நோக்கம் ஆகும். கர்நாடகத்தில் பசுமை பகுதிகள் அதிகரிக்க வேண்டும். இந்த பசுமை பகுதிகளை அதிகரிக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வறண்ட மலை பகுதிகளில் பசுமையை ஏற்படுத்த ஒரு பெரிய திட்டத்தை வகுத்துள்ளோம். அத்துடன் தோட்டக்கலை விவசாய பரப்பும் அதிகரிக்க வேண்டும். இதற்காக தோட்டக்கலைத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். தோட்டக்கலை விவசாயத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கிறது. இதனால் உற்பத்தி, சாகுபடியும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து மிகுந்த உணவு தானியங்களை மக்களுக்கு வழங்க முடியும்.

தோட்டங்களின் நகரம்

பெரிய அளவில் தோட்டக்கலை பரப்பை அதிகப்படுத்தி பண்ணைகளை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை நேரில் கண்டு அதன் பயனை பெற வேண்டும். மேலும் மக்கள் தங்களுக்கு உரிய இடத்தில் மலர்களை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். பெங்களூருவுக்கு பூங்கா, தோட்டங்களின் நகரம் என்ற பெயர் உண்டு.

ஆனால் அந்த பெயர் தற்போது குறைந்து வருகிறது. மீண்டும் தோட்டங்களின் நகரம் என்ற பெயரை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். லால்பாக், கப்பன் பார்க் ஆகியவற்றின் தற்போதைய தன்மையை பாதுகாத்து கொண்டு, பிற பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். பெங்களூரு புறநகர் பகுதிகளில் பூங்காக்களை அமைத்து, பூங்கா நகரம் என்ற பெயரை நிரந்தரமாக காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்