'மைக்ரோசாப்ட் சர்வர்' கோளாறால் பாதிக்கப்பட்ட விமான சேவை சீராகி வருகிறது - மத்திய அரசு

‘மைக்ரோசாப்ட் சர்வர்’ கோளாறால் பாதிக்கப்பட்ட விமான சேவை சீராகி வருவதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-07-20 07:05 GMT

டெல்லி,

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் இயங்குதளத்தில் நேற்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மென்பொருள் சார்ந்துள்ள தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் உலகம் முழுவதும் முடங்கின.

இந்த தொழில்நுட்ப கோளாறால் மைக்ரோசாப்ட்டிலோ அல்லது விண்டோசிலோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 'கிரவுட்ஸ்டிரைக்' அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான 'கிரவுட்ஸ்ட்ரைக்' மென்பொருளை அப்டேட் செய்தவர்களின் கணினி மற்றும் மடிக்கணினிகள் முடியங்கின. 'மைக்ரோசாப்ட் 365' என்ற செயலியும் முடங்கியது. மேலும், கம்ப்யூட்டர் திரையில் 'புளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என்ற வாசகம் ஒளிர்ந்தது. இதனால், பயனாளர்கள் குழப்பம் அடைந்தனர். ஐ.டி. ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவித்தனர்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு உலகம் முழுவதும் எதிரொலித்தது. விமான சேவை, பங்குச்சந்தை உள்பட பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.


இந்தியாவிலும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கபப்ட்டன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. இதனால், அச்சேவைகள் கைகளால் மேற்கொள்ளப்பட்டன. போர்டிங் பாஸ், முன்பதிவு, செக்-இன் உள்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிறுவனங்கள் இறங்கின.

இந்நிலையில், 'மைக்ரோசாப்ட் சர்வர்' கோளாறால் பாதிக்கப்பட்ட விமான சேவை சீராகி வருவதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்