உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஓநாய் தாக்குதல்: 5 வயது சிறுமி படுகாயம்

ஓநாய்களில் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அவைகளை கண்டதும் சுட உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-09-03 10:39 GMT

File image

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மஹசி துணை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்கள் சில நாட்களாக தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். அந்த பகுதியில் சுற்றி வரும் ஓநாய் கூட்டம் ஒன்று திடீரென இரவில், ஊருக்குள் புகுந்து வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளை, வாயில் கவ்வி கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடி விடுகிறது.

இதுவரை 8 குழந்தைகள், ஒரு பெண் என 9 பேர் ஓநாய் கூட்ட தாக்குதலுக்கு பலியாகி உள்ளன. ஓநாய்களின் இருப்பிடங்களை கண்டறிவதற்காக, கேமிராவுடன் கூடிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஓநாய் கூட்டத்தின் தாக்குதல் தொடருவது அந்த பகுதி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

ஆபரேசன் பேடியா என்ற பெயரில் ஓநாய்களை பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் 4 ஓநாய்கள் பிடிபட்டு உள்ளன. 2 ஓநாய்கள் சிக்காமல் தப்பி விட்டன. அவை இடங்களை மாற்றி கொண்டே உள்ளன. இதனால், அவற்றை தேடி கண்டுபிடிப்பதே சிக்கலாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தின் ஹார்டி பகுதியில் அமைந்துள்ள கிர்தர் பூர்வா கிராமத்தில் நேற்று இரவு 5 வயது சிறுமி அப்சனா என்பவர் தனது பாட்டியுடம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஓநாய் சிறுமியை தாக்கியுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு விழித்த குடும்பத்தினரின் சத்தம் கேட்டு சிறுமியை ஓநாய் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடியது.

ஓநாய் தாக்கிய தகவல் கிடைத்ததும் உள்ளூர் எம்.எல்.ஏ. சுரேஷ்வர் சிங் சம்பவ இடத்திற்கு வந்தார். மேலும் காயமடைந்த சிறுமி உள்ளூர் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார், அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு முதலுதவி அளித்தனர். முன்னதாக நேற்று ஓநாய் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் ஓநாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ஓநாய்களை கண்டதும் சுட உத்தரபிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்