கர்நாடகத்தில் மழை பெய்ய வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலில் முதல்-மந்திரி சித்தராமையா சாமி தரிசனம்
மலை மாதேஸ்வரா கோவிலில் முதல்-மந்திரி சித்தராமையா சாமி தரிசனம் செய்தார். கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ய வேண்டி அவர் வெள்ளித்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
பெங்களூரு:
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற மலை மாதேஸ்வரா கோவிலுக்கு நேற்று முதல்-மந்திரி சித்தராமையா வந்தார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவிலில் வெள்ளித்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
பின்னர் கோவில் வளாகத்தில் நடந்த கூட்டு திருமணத்தை முதல்-மந்திரி சித்தராமையா நடத்தி வைத்தார். அப்போது அவர் தனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து 39 புதுமண தம்பதிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ய வேண்டி நான் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டேன். முதல்-மந்திரியாக 2-வது முறையாக பதவி ஏற்ற பின்பு நான் இங்கு முதல் முறையாக வந்துள்ளேன். நாட்டில் திருமண வைபவங்களை ஆடம்பரமாக நடத்த தொடங்கி விட்டார்கள். ஆனால் திருமணத்தை நடத்தவே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக தான் இந்த கூட்டு திருமணங்கள் நடத்தப்படுகிறது.
கடன் வாங்கி திருமணத்தை நடத்தினால் பின்னர் அந்த கடனை அடைப்பதற்கு வாழ்க்கை முழுவதையும் செலவிட நேரிடும். விவசாயத்துக்காக கடன் வாங்கி அதைக்கொண்டு திருமணத்தை நடத்தும் நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும்.
மாதேஸ்வரன் மலையில் வீற்றிருக்கும் மலை மாதேஸ்வரன் கோவில் ஒரு புண்ணிய தலம். ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் இங்கு ஆத்மார்த்தமாக வந்து செல்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த புண்ணிய தலம் மீது எனக்கு தனி கவுரவம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாம்ராஜ்நகர் மீதான அவநம்பிக்கை அகன்றுவிட்டது
முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மலை மாதேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், 'நான் கடந்த முறை முதல்-மந்திரியாக இருந்தபோது 12 முறை சாம்ராஜ்நகருக்கு வந்துள்ளேன். ஆனால் 5 ஆண்டுகளும் ஆட்சி புரிந்தேன். இதன்மூலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் மீதுள்ள அவநம்பிக்கையும், மூடநம்பிக்கையும் அகன்றுவிட்டது. அதாவது சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வந்தால் ஆட்சியாளர்கள் பதவியை இழப்பார்கள் என்ற அவநம்பிக்கையும், மூடநம்பிக்கையும் அகன்றுவிட்டது' என்று கூறினார்.