மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு.. வாக்காளர்கள் அலறியடித்து ஓட்டம்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டாக நீடித்து வரும் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கலவரம் இன்னும் முழுமையாக ஓயாததால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் மணிப்பூரை பொறுத்தவரை உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் என 2 தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதைப்போல வெளி மணிப்பூர் தொகுதியில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் மீதமுள்ள 13 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் வருகிற 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாநிலத்தின் மொய்ராங் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடி அருகே இன்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு, வாக்குச்சாவடியில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.