தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

சோமவார்பேட்டையில் இலவச மின்சாரம் வழங்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-26 18:45 GMT

குடகு

காபி விவசாயிகள் போராட்டம்

குடகு மாவட்டம் சோமாவர்பேட்டையை சேர்ந்த காபி விவசாயிகள் நேற்று தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கத் தலைவர் தினேஷ் கூறும்போது:-

மழையால் காபி விவசாயம் பாதிக்கப்பட்டது. இதுவரை அதற்கு சரியான நிவாரணம் வழங்கவில்லை. பல ஆண்டுகளாக 10 எச்.பி. குதிரை திறன் இலவச மின்சாரம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம்.

ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இலவச மின்சாரத்தை உடனே வழங்கிட வேண்டும். மேலும் வனப்பகுதியில் இருந்து காபி தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. கூலி தொழிலாளிகள் பலர் காட்டுயானை தாக்கி இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும்.

ரேஷன் அட்டை திருத்த அவகாசம்

காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குடகு ஆர்.எம்.சி.யார்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை. இதை தட்டிக்கேட்டால் வியாபாரிகள், விவசாயிகளை தாக்க முயற்சிக்கின்றனர். எனவே சரியான விலையை நிர்ணயம் செய்யவேண்டும்.

ரேஷன் அட்டையில் திருத்தம் ெசய்யும் பணிகளுக்கு 4 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த 4 நாட்களுக்கு சர்வர் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் பல விவசாயிகள் தங்கள் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்யவில்லை. எனவே ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கவேண்டும். அதேபோல 2017-ம் ஆண்டு குட்டேஓசூர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஆனால் இதுவரை அவரை பணியிடை நீக்கம் செய்யவில்லை. உடனே அவரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தாசில்தாரிடம் மனு

மேலும் இது தொடர்பாக தாசில்தாரை சந்தித்த விவசாயிகள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். அதை வாங்கிய தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்