காபி தோட்ட உரிமையாளரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

காபி தோட்ட உரிமையாளரை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-27 05:30 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா வாதனகுந்தி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவர் சொந்தமாக காபி தோட்டம் ஒன்று உள்ளது. இவரது தோட்டத்தையொட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. அவர்கள் அனைவரும் இவரது தோட்டத்தை தாண்டிதான், செல்லவேண்டும். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கிருஷ்ணப்பா, அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் செல்வதற்கு வழிவிடவில்லை. மாறாக செல்லும் பாதையில் இரும்பு வேலிகள் அமைத்து அடைத்தார். இதனால் விவசாயிகள் கோபமடைந்தனர். மேலும் இதுகுறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரி மற்றும் தாசில்தாரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் காபிதோட்ட உரிமையாளர் கிருஷ்ணப்பாவின் நடவடிக்கையை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் இரும்பு வேலியை அகற்றவில்லை என்றால், அவர் மீது மாவட்ட கலெக்டர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர் ரூபா, போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் துணை கலெக்டரிடம், கிருஷ்ணப்பா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷ மிட்டனர். பின்னர் இது குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவை வாங்கிய கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்