பெங்களூருவில் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

பெங்களூரு அருகே வாலிபர் கொலையில் கைதான பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-11-25 18:45 GMT

நெலமங்களா:

ரவுடி கொலை

பெங்களூரு தாசனபுரா அருகே மாச்சோஹள்ளியில் உள்ள குடோனில் கடந்த 14-ந் தேதி ரவுடியான நடராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜை கொலை செய்தது, பிரபல ரவுடியான ராஜராஜன், அவரது கூட்டாளிகள் என்பது தெரிந்தது. இதையடுத்து, ராஜராஜனின் கூட்டாளிகள் 3 பேரை மாதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால் ரவுடி ராஜராஜன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய மாதநாயக்கனஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

பிரபல ரவுடி கைது

பின்னர் நேற்று முன்தினம் ரவுடி ராஜராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். நேற்று அதிகாலையில் கொலை நடந்த தாசனபுரா, மாச்சோஹள்ளிக்கு விசாரணைக்காக ராஜராஜனை போலீசார் அழைத்து சென்றனர். அங்கிருந்து நவில் லே-அவுட் அருகே நைஸ் ரோடு ஜங்ஷனின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு வைத்து நடராஜ் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை எடுத்து போலீசாரிடம் கொடுக்கும் போது திடீரென்று போலீஸ்காரர் காஜாவை ராஜராஜன் தாக்கினார். இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த மற்ற போலீசாரையும் தாக்க முயன்றதுடன், தப்பி ஓடுவதற்கும் ராஜராஜன் முயன்றார்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ராஜராஜனை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். பின்னர் ரவுடி ராஜராஜன், போலீஸ்காரர் காஜா அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜராஜன் பெயர் சாம்ராஜ்பேட்டை, கே.பி.அக்ரஹாரா போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கைதான ரவுடி ராஜராஜன் பெங்களூரு மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருந்தார். முன்விரோதம் காரணமாக நடராஜை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜராஜன் தீர்த்து கட்டியது தெரியவந்தது. கைதான ராஜராஜன் மீது மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்