உப்பள்ளி-ராமேஸ்வரம், சிவமொக்கா-சென்னை ரெயில் சேவை நீட்டிப்பு
உப்பள்ளி-ராமேஸ்வரம், சிவமொக்கா-சென்னை ரெயில் சேவையை நீட்டித்து தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரு:
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உப்பள்ளி- ராமேஸ்வரம் இடையே இருமார்க்கமாக (வண்டி எண்:-07355/07356) வாராந்திர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் சேவை 24-ந் தேதியுடன் (நேற்று முன்தினம்) நிறைவு பெற்றது.
தற்போது இந்த ரெயில் சேவை வருகிற 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ராமேசுவரம்-உப்பள்ளி இடையே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கி வந்த ரெயில் சேவை நேற்றுடன் முடிந்தது. இந்த ரெயில் சேவையும் வருகிற 2-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல சிவமொக்கா டவுன்-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே இயங்கும் ரெயில் (06223) வருகிற 2-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-சிவமொக்கா டவுன் ரெயில் (06224) வருகிற 3-ந் தேதி முதல் டிசம்பர் 28-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.