டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளது; மந்திரி சோமண்ணா பரபரப்பு பேட்டி

டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளதாக வீட்டு வசதி மந்திரி சோமண்ணா கூறியுள்ளார்.

Update: 2023-03-13 18:45 GMT

பெங்களூரு:

சட்டசபை தேர்தல்

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் வீட்டு வசதி மந்திரியாக பணியாற்றி வருபவர் சோமண்ணா. பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், அக்கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அவரை கட்சியில் தக்க வைத்துக்கொள்ள பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் மந்திரி சோமண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனக்கு தற்போது 72 வயது. இனி நடக்க வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால் சோமண்ணா என்பவர் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் நீர் அல்ல. நான் ஓடிக்கொண்டே இருக்கும் நீரை போன்றவன். நான் ஒன்றும் சன்னியாசி அல்ல. வருகிற சட்டசபை தேர்தலில் எனக்கு டிக்கெட் வழங்கினால் போட்டியிடுவேன். இல்லாவிட்டால் அமைதியாக இருப்பேன். ஆனால் 4 சுவர்களுக்கு மத்தியில் கட்சி தலைவர்களுக்கு நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை கூறி இருக்கிறேன். வேறு வழிகள் இருக்கின்றன.

எனக்கு அதிருப்தி

நான் முதலில் காங்கிரசில் இருந்தேன். ஜனதா கட்சி, ஜனதா தளம் கட்சிகளிலும் பணியாற்றி இருக்கிறேன். அரசியலில் இதெல்லாம் சகஜமாக உள்ள விஷயங்கள். நான் எப்போதாவது எனது மகனுக்கு டிக்கெட் வழங்குமாறு கேட்டுள்ளேனா?. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் எனது நண்பர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது.

பா.ஜனதா மீது எனக்கு அதிருப்தி உள்ளதாக நான் எப்போதும் கூறவில்லை. என்னை பெங்களூருவுக்கு மட்டும் வரையறுப்பது ஏன்?. கட்சி எனக்கு வழங்கிய அனைத்து பொறுப்புகளையும் வெற்றிகரமாக செய்துள்ளேன். துமகூரு தொகுதியில் பா.ஜனதாவை வெற்றி பெற வைத்தேன். வாய்ப்பும், தலையெழுத்தும் இருந்தால் எனது மகனுக்கு டிக்கெட் கிடைக்கும்.

அனைவருக்கும் அன்பு

அவரவர் குழந்தைகள் மீது அனைவருக்கும் அன்பு இருக்கிறது. ஆனால் எனது மகனை எப்போதும் அரசியலுக்குள் கொண்டுவந்தது இல்லை. ஆனால் கட்சியில் வேறு தலைவர்களின் குழந்தைகள் அரசியலில் இருக்கலாமா?. எனக்கு பின்பிற்றப்படும் விதிமுறை மற்ற தலைவர்களுக்கும் பொருந்தும் இல்லையா?. பிற தலைவர்களின் மகன்களுக்கு டிக்கெட் இல்லை என்றால், எனது மகனுக்கும் டிக்கெட் வேண்டாம்.

இவ்வாறு சோமண்ணா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்