20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு; நிச்சயம் நடக்கும்: பீகார் துணை முதல்-மந்திரி பேட்டி

பீகாரில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிமொழி பற்றி பொறுத்திருந்து பாருங்கள் என துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

Update: 2022-09-12 05:10 GMT



பாட்னா,



பீகாரில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக கடந்த மாதம் நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார்.

பீகாரில் எட்டாவது முறையாக அவர் முதல்-மந்திரியான நிலையில், துணை முதல்-மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்று கொண்டார்.

வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் டெல்லி சென்றார். இது தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து டெல்லியில் முகாமிட்ட அவர் ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும், முன்னாள் முதல்-மந்திரிகளையும் அடுத்தடுத்து சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில், பீகாரின் பாட்னா நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் உறுதிமொழி பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்தபோது, இதனை நம்ப மறுப்பவர்கள் பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் அது நடக்கும். யாரோ ஒரு சிலர் ஏதோ கூறியதற்கு நான் பதிலளிக்க முடியாது. நாங்கள் அரசில் இருக்கிறோம். இது எங்களுடைய உறுதிமொழி. நிச்சயம் இது நடக்கும் என கூறினார்.

சுதந்திர தின உரையின்போது, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இறுதியாக பேசும்போது, பீகாரில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் அரசிலும் மற்றும் அரசுக்கு வெளியேயும் ஏற்படுத்தப்படும் என உறுதிமொழி கூறினார். எனினும், இதனை எப்படி செயல்படுத்த போகிறார் என்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்