அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு சரத் பவார் ஆதரவு

அவசர சட்ட விவகாரத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது ஆதரவை வழங்கி உள்ளார்.

Update: 2023-05-25 11:40 GMT

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்திப்பதற்காக மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் மையத்திற்கு, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று காரில், நேரில் சென்றார்.

அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா, டெல்லி மந்திரி அதிஷி மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் சென்றனர். அவர்களை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதன்பின்பு, சரத்பவாருடனான சந்திப்பு நடந்தது. சந்திப்புக்கு பின் கெஜ்ரிவால் கூறும்போது, டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்டம் ராஜ்யசபையில் தோல்வியடைய செய்யும் வகையில், எங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என சரத் பவார்ஜி உறுதி கூறியுள்ளார்.

பா.ஜ.க. அல்லாத அனைத்து கட்சிகளிடம் இருந்தும் ஆதரவை பெற நாங்கள் முயற்சித்து வருகிறோம். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்திப்பதற்காக நாளை நேரம் கேட்க இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் பற்றிய விவகாரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதனை தொடர்ந்து, தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தில், இந்த ஆணையம், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தவும், அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவசர சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னருக்கு மீண்டும் அதிகாரம் அளிப்பதற்கு இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. இந்த விவகாரத்தில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்களது ஆதரவை முன்பே வழங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்