தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நீடித்தது.;
சிசோடியா கைது
கடந்த 2021-2022 நிதியாண்டில் டெல்லி அரசு, டெல்லி மதுபான கொள்கையை வகுத்தது. மதுபான வியாபாரிகளுக்கு உரிமங்கள் அளிக்கப்பட்டன. மதுபான வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். லஞ்சம் கொடுத்த மதுபான வியாபாரிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டன.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். கலால்துறை மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. 2 வாரங்களுக்கு முன்பு சிசோடியா கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. வழக்கு அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. மணிஷ் சிசோடியா உள்பட 12 ேபரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ரூ.100 கோடி லஞ்சம்
தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அக்கட்சியின் எம்.எல்.சி.யாக இருக்கிறார். மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில், அவர் உள்ளிட்ட சிலர் 'சவுத் குரூப்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்து, அதிக சலுகைகளை பெற்றதாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளன.
இந்த 'சவுத் குரூப்'பை சேர்ந்த ஐதராபாத் மதுபான அதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளை, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கவிதாவின் பினாமி முதலீடுகளை அவர்தான் கவனித்து கொண்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சம்மன்
கவிதாவுடன் தொடர்புடைய ஆடிட்டர் புச்சிபாபு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழலில் கவிதாவின் தொடர்பை இருவரும் வாக்குமூலமாக அளித்திருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், கவிதாவிடம் சி.பி.ஐ. ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது. அதுபோல், அமலாக்கத்துறை கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வருமாறு கவுதாவுக்கு 'சம்மன்' அனுப்பியது. ஆனால், மறுநாள் ெடல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டி இருப்பதால், மற்றொரு நாள் வருவதாக கவிதா பதில் அளித்தார்.
ஆஜர்
அதன்படி, உண்ணாவிரதம் முடிந்த மறுநாளான இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் கவிதா விசாரணைக்கு ஆஜரானார். டெல்லி துக்ளக் சாலையில் உள்ள சந்திரசேகர ராவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர், ஒன்றரை கி.மீ. தூரத்தில் அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்தில், ஏராளமான போலீசாரும், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கவிதாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கை முஷ்டியை உயர்த்தி காண்பித்தபடி, கவிதா அலுவலகத்துக்குள் நுழைந்தார். அவருடன் வந்த ஊழியர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர்.
9 மணி நேரம் விசாரணை
டெல்லி மதுபான கொள்கை ஊழல் குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்விகள் கேட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐதராபாத் மதுபான அதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளையை எதிரில் உட்கார வைத்து, கவிதாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது பதிலை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் வாக்குமூலமாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை, இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. 9 மணி நேர விசாரணைக்கு பிறகு கவிதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.