பெங்களூருவில், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.90 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு
பெங்களூருவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.90 கோடி போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.90 கோடி போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரூ.90 கோடி போதைப்பொருட்கள்
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் கடந்த ஆண்டு(2022) அக்டோபர் மாதம் முதல் இந்த மாதம்(மார்ச்) வரை 4 ஆயிரத்து 110 கிலோ கஞ்சா, 11 கிலோ கஞ்சா ஆயில், 22 கிலோ ஆசிஷ் ஆயில், 8 கிலோ அபீம், 5½ கிலோ சிரஸ், 62 கிலோ எம்.டி.எம்.ஏ. உள்பட ரூ.90 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
அந்த போதைப்பொருட்களை சட்டப்படி அழிப்பதற்காக கோர்ட்டில் போலீசார் முறையான அனுமதியையும் பெற்றிருந்தார்கள். அதாவது போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு மாநாட்டையொட்டி பெங்களூருவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்தனர்.
டாபஸ் பேட்டையில் அழிப்பு
அதன்படி, நகரில் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த போதைப்பொருட்கள் நேற்று காலையில் லாரியில் ஏற்றப்பட்டு, பெங்களூரு புறநகர் மாவட்டம் டாபஸ்பேட்டை தொழிற்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது. அப்போது தேசிய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளும், போலீசாரும் உடன் இருந்தனர்.
பெங்களூருவில் ஒட்டு மொத்தமாக ரூ.90 கோடிக்கு 4 ஆயிரத்து 297 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், டாபஸ்பேட்டை தொழிற்பேட்டை பகுதிக்கு எடுத்து சென்று அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.