ராஜஸ்தான் அரசியலில் அதிரடி மாற்றம்.. ஒன்றிணையும் அசோக் கெலாட் - சச்சின் பைலட்

அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.;

Update:2023-05-29 23:34 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-மந்திரிக்கு எதிராகவே சச்சின் பைலட் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த கருத்து மோதல் வருகின்ற சட்டமன்ற தேர்தலை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இருவரையும் ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்தி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டு இருக்கிறது.

முன்னதாக இன்று அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பானது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையானது சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது.

இந்த நிலையில் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர். இருவரும் ஒருமனதாக இந்த முன்மொழிவை ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

மேலும் பாஜகவுக்கு எதிரான கூட்டுப் போராட்டமாக இது இருக்கும் என்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்