இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது நாளை விசாரணை

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது டெல்லி ஐகோர்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

Update: 2024-03-12 23:18 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி பெயரை பயன்படுத்துவது தொடர்பாக அளித்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா நேற்று விசாரித்தார். அப்போது புகழேந்தி சார்பில் வக்கீல் கார்த்திக் வேணு ஆஜராகி, மனுதாரர் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார்களை சுட்டிக்காட்டி வாதிட்டார்.

இதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் அங்கித் அகர்வால் ஆட்சேபம் தெரிவித்து, அ.தி.மு.க.வின் உறுப்பினராக உள்ளதாக தெரிவிக்கும் மனுதாரர் சட்டப்பூர்வமாக மனு அளிக்க உரிமையில்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு இந்த மனு மீதான விசாரணையை மார்ச் 14-ந் தேதிக்கு ( நாளை) தள்ளி வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்