தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- தார்வார் ஐகோர்ட்டு கிளை உத்தரவு

பெலகாவியில் தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி தார்வார் ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-06-30 16:55 GMT

தார்வார்: பெலகாவியில் தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி தார்வார் ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.10 லட்சம் நிவாரணம்

பெலகாவி மாவட்டம் பாலிகுந்தரா கிராமத்தை சேர்ந்தவர் யூசுப். இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அந்த குழந்தையை தெரு நாய் கடித்து கொன்று இருந்தது. ஆனால் தெரு நாய் கடித்து குழந்தை பலியானதற்காக பெலகாவி மாநகராட்சி சார்பில் எந்த நிவாரணமும் வழங்காமல் இருந்தது. இதுபற்றி தார்வார் ஐகோர்ட்டு கிளையில் யூசுப் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது குழந்தை தெரு நாய் கடித்து பலியானதற்காக மாநகராட்சியில் இருந்து எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு பெலகாவி மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிர்வாக அமைப்புகளே பொறுப்பு

மேலும் தெருநாய் கடித்து யாராவது உயிர் இழந்தால், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு கண்டிப்பாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மாநகராட்சி, நகரசபை, கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்துகள் என எந்த நிர்வாக அமைப்புகளுக்கு கீழ் சம்பவம் நடந்ததோ, அந்த நிர்வாக அமைப்பு தான் நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களே முழு பொறுப்பு என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சிகளாக இருந்தாலும் சரி, பிற நிாவாக அமைப்பாக இருந்தாலும் சரி, அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்