'நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை ஒரு அரசியல்சாசன நடைமுறை' - மத்திய மந்திரி கருத்து; தென்னிந்திய கட்சிகள் எதிர்ப்பு
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்வது ஒரு அரசியல்சாசன நடைமுறை என மத்திய மந்திரி கூறியுள்ளார். இதற்கு தென்னிந்திய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.;
ஐதராபாத்,
டெல்லியில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள நாடாளுமன்றத்தின் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வசதி உள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இந்த விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், அது தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும், மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களை புறக்கணிப்பதாகவும் தெலுங்கானாவின் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிர சமிதி குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறியதாவது:-
தென்னிந்தியாவுக்கு ஆதரவு
புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதிர்கால தேவைகளின் அடிப்படையில் கட்டப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்பது ஒரு அரசியல்சாசன நடைமுறை. இது எப்போது நடைபெறும் என நமக்கு தெரியாது. அதற்காக புதிய சட்டம் எதையும் உருவாக்கவில்லை.
தென்னிந்திய பிரபலங்களை பிரதமர் மோடி எப்போதும் மதித்து வருகிறார். அவர் எப்போதும் தென்னிந்திய சுதந்திர போராட்ட வீரர் அல்லது புலவர் அல்லது பிரபலத்தின் மேற்கோளை கூறியே தனது உரைகளை முடிக்கிறார்.
மேலும் தென்னிந்திய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் கூட தென் இந்தியாவை சேர்ந்தது. இவ்வாறு கிஷண் ரெட்டி கூறினார்.
அபத்தமானது
அதேநேரம் தொகுதி மறுவரையறை விவகாரத்தை பாரதிய ராஷ்டிர சமிதி மீண்டும் எதிர்த்து உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் கூறுகையில், '1970 மற்றும் 80-களில் மத்திய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தென் மாநிலங்கள் தீவிரமாக செயல்படுத்தின. இவ்வாறு மக்கள் தொகையை கட்டுப்படுத்திய இந்த மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை குறைப்பது அல்லது நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை குறைப்பது தண்டனை ஆகும். இது அபத்தமானதும், பயங்கரமானதும் ஆகும்' என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை கடந்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் விவாதிக்க வேண்டும் என மத்திய அரசையும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஓவைசியும் எதிர்ப்பு
இதைப்போல நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு மஜ்லிஸ் கட்சித்தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான ஓவைசியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக கே.டி.ராமாராவ் கூறியுள்ள கருத்துகளை வரவேற்றுள்ள அவர், 'மக்கள்தொகை அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்போகிறீர்கள் என்றால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய அந்த மாநிலங்களுக்கு எப்படி அநீதி இழைக்க முடியும்?' என கேள்வி எழுப்பி உள்ளார்.