டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; 21-ந்தேதி ஆஜராக கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை சம்மன்

ஒரு சம்மனை 3 முறை ஒருவர் தவிர்க்கலாம். அதன்பின்னர், ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு அந்த நபருக்கு எதிராக விசாரணை அமைப்பு வாரண்ட் பிறப்பிக்க முடியும்.

Update: 2023-12-18 14:01 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவிடம், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் நேரடி விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோடிக்கணக்கிலான ஊழல் பணம், கோவா மற்றும் பிற மாநிலங்களின் தேர்தல் பிரசார செலவுகளுக்காக, அக்கட்சிக்கு திசைதிருப்பப்பட்டது என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி, வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டும்.

இதற்கு முன் கடந்த நவம்பர் 2-ந்தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அந்த நாளில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அமலாக்க துறைக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், மத்திய பிரதேசத்தில் அவருடைய கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட சென்றதற்காக சம்மனில் இருந்து விலக்கு கோரினார்.

இந்த சம்மன் சட்டவிரோதம் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கடுமையாக குற்றச்சாட்டு கூறியதுடன், சம்மனை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒரு சம்மனை 3 முறை ஒருவர் தவிர்க்கலாம். அதன்பின்னர், ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு அந்த நபருக்கு எதிராக விசாரணை அமைப்பு வாரண்ட் பிறப்பிக்க முடியும்.

கடந்த ஏப்ரலில் கெஜ்ரிவாலிடம், 9 மணி நேரம் வரை சி.பி.ஐ. அமைப்பு விசாரணை மேற்கொண்டது. அப்போது அவர், 56 கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. எல்லாம் போலியானவை. ஒரு சிறிய சான்று கூட அவர்களிடம் இல்லை என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்