கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மனு: தீர்ப்பை ஒத்திவைத்த டெல்லி ஐகோர்ட்டு

கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Update: 2024-04-03 12:17 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தன் மீதான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறை காவல் ஆகியவை சட்டவிரோதமானவை என்றும், தன்னை அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. இந்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா முன்பு கடந்த மாதம் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வழக்கை விசாரிக்க 3 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, முதல்-மந்திரியின் கைது மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் கைது அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கோட்பாடுக்கு எதிரானது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை நியாயம் அல்ல. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்க கோரி அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெல்லி முதல்-மந்திரியின் கைதில் எவ்வித சட்ட விரோதமும் இல்லை, தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது. போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா?, முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்