மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சி.பி.ஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2024-04-15 06:04 GMT

புதுடெல்லி,

மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 15-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6ம் தேதி திகார் சிறையில் இருக்கும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.ஐ .அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது. இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கே.கவிதா உடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சி பாபுவின் போனில் இருந்து நிலம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையானது டெல்லி திகார் சிறையில் ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வழக்கறிஞர் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கவிதாவை திகார் சிறையில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என சி.பி.ஐ. தெரிவித்திருந்தது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கவிதா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து கவிதாவை கடந்த 12ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை விசாரிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கவிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிதேஷ் ராணா, சி.பி.ஐ.யின் மனுவை எதிர்த்தார், மேலும் கவிதாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கவிதாவை வரும் 15ம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக கவிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், சி.பி.ஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. கூடுதல் அவகாசம் எதுவும் கேட்கவில்லை. இதையடுத்து கவிதாவை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கவிதா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு அழைத்து செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, "இது சி.பி.ஐ. காவல் இல்லை, பா.ஜ.க.வின் காவல். பா.ஜ.க. வெளியில் என்ன பேசுகிறதோ அதையே சி.பி.ஐ உள்ளே கேட்கிறது, தொடர்ந்து 2 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் அதையே கேட்கிறது, புதிதாக எதுவும் இல்லை என்றார்." 

Tags:    

மேலும் செய்திகள்