டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: கடுமையாகும் கட்டுப்பாடுகள்
டெல்லியில் வருகிற 13 முதல் 20 ஆம் தேதி வரை பதிவெண்கள் அடிப்படையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர்வாசிகள் மூச்சு விட சிரமப்படுகின்றனர். இது குழந்தைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தொடக்கப்பள்ளிகள் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டு இருந்தன.
அங்கு காற்றின் தரத்தில் மேம்பாடு இல்லாத காரணத்தால் இந்த விடுமுறையை மாநில அரசு மேலும் நீடித்து இருக்கிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி வரை தொடக்கப்பள்ளிகள் மூடப்படுவதாக மாநில கல்வி மந்திரி அதிஷி கூறியுள்ளார்.
இந்தநிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தொடர்ந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, டெல்லியில் வருகிற 13 முதல் 20 ஆம் தேதி வரை பதிவெண்கள் அடிப்படையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
காற்று மாசு தொடர்பாக விதிக்கப்பட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். டெல்லியில் கட்டிடப் பணிகள் எதுவும் நடக்க இப்போது அனுமதி இல்லை. அதுபோல 10, 12 ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்படுகிறது. மாறாக, அவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி 'கடுமையான பிரிவில்' உள்ளது குறிப்பிடத்தக்கது.