டெல்லி காற்று தர குறியீடு மிக மோசம்; கட்டுமானம், கார்களுக்கு தடை அமல்

இதன்படி பி.எஸ்.-3 பெட்ரோல் மற்றும் பி.எஸ்.-4 டீசல் ரக 4 சக்கர வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

Update: 2024-01-14 19:53 GMT

புதுடெல்லி,

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்ட நிலையில், கடந்த 1-ந்தேதி முதல் திருத்தப்பட்ட ஜி.ஆர்.ஏ.பி. திட்டத்தின் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இதன்படி, கட்டுமானம் மற்றும் குறிப்பிட்ட ரக 4 சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை விலக்கி கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்று கிழமை) காலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்தது. இது, டெல்லி ஆனந்த விகாரில் 478 ஆகவும், ஜே.எல்.என். பகுதியில் 465 ஆகவும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம் 3-ல் 465 ஆகவும் மற்றும் ஐ.டி.ஓ. 455 ஆகவும் பதிவாகி இருந்தது. இவை அனைத்தும் மோசம் என்ற பிரிவில் அடங்கும்.

டெல்லியில் காற்றின் தர குறியீடு மோசமடைந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பது என முடிவானது. கட்டுமானம் மற்றும் குறிப்பிட்ட ரக 4 சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன்படி பி.எஸ்.-3 பெட்ரோல் மற்றும் பி.எஸ்.-4 டீசல் ரக 4 சக்கர வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என டெல்லி போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. இன்று (திங்கட் கிழமை) முதல் இந்த தடை நடைமுறைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்