ஆற்றில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
வடக்கு டெல்லியின் புராரியில் யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
புதுடெல்லி,
வடக்கு டெல்லியின் புராரியில் யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். முன்னதாக உத்திரபிரதேச மாநிலம் லோனியில் வசிக்கும் வாசிம் (வயது 15), கமல் (வயது 17), இலியாஸ் (வயது 20) மற்றும் சமீர் (வயது 17) நால்வரும் வியாழக்கிழமை ஆற்றுக்கு குளிப்பதற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 4 பேரும் யமுனை ஆற்றில் குளிக்கச் சென்று தவறி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கி இறந்ததை நேரில் பார்த்த பட்லா என்ற ஹரிஷ் என்பவர் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து சிறுவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடந்தது. இதையடுத்து இலியாஸ், வாசிம் மற்றும் கமல் ஆகியோரின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. சமீரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட உடல்களை போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.