சிக்கமகளூருவில் காட்டுயானையை பிடிக்கும் பணியில் தொய்வு

சிக்கமகளூருவில் ஒரு வாரம் ஆகியும் காட்டுயானை ஒன்று பிடிபடாமல் சுற்றித்திரிகிறது. இதனால் அதை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-22 15:00 GMT

சிக்கமகளூரு;

காட்டுயானை

ஹாவேரி மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஒரு காட்டுயானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த காட்டுயானையை பிடித்து சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா தணிகேபையலு வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் அந்த காட்டுயானையை வனப்பகுதியில் விடும்போது வனத்துறையினர் அதற்கு ரேடியோ காலர் பொருத்தினர். அதன்மூலம் அந்த காட்டுயானையின் நடவடிக்கைகளையும், இருப்பிடத்தையும் கண்காணித்து வந்தனர்.

ஆனால் அந்த காட்டுயானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வந்தது. மேலும் மனிதர்களையும் தாக்கி வந்தது.

கும்கி யானைகள்...

இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள கொப்பா தாலுகா, என்.ஆர்.புரா தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். மேலும் அவர்கள் அந்த காட்டுயானையை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் அரசிடம் அனுமதி கோரினர். அதன்பேரில் அரசும் அந்த காட்டுயானையை பிடிக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து கடந்த 7 நாட்களுக்கு முன்பு அந்த காட்டுயானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். மேலும் குடகு மாவட்டம் துபாரே யானைகள் முகாமில் இருந்து பானுமதி, பகதூர், சாகர், சோமண்ணா ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

அவற்றின் உதவியுடன் வனத்துறையினர் கொப்பா தாலுகா மேகுந்தா கிராமத்தில் முகாமிட்டு அந்த காட்டுயானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மலை உச்சிக்கு...

வனத்துறையினர் அந்த யானையின் இருப்பிடத்தை கண்டறிந்து கும்கி யானைகளின் உதவியுடன் அங்கு செல்வதற்குள், காட்டுயானை மலை உச்சிக்கு சென்றுவிடுகிறது. இதனால் அதை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் அந்த காட்டுயானையை மலை உச்சியில் இருந்து கீழே வரவழைக்க பானுமதி என்ற பெண் யானையை மட்டும் மலை உச்சிக்கு அனுப்புவது என்றும், அதன்மூலம் அந்த காட்டுயானையை ஆசுவாசப்படுத்தி பிடித்து விடலாம் என்றும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும் அந்த காட்டுயானை வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் உள்ளது. விரைவில் அந்த காட்டுயானையை பிடித்து விடுவோம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்