பெங்களூருவில் வறட்சியின் பிடியில் சிக்கியதால் உல்லால் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
பெங்களூருவில் வறட்சியின் பிடியில் சிக்கியதால் உல்லால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.;
பெங்களூரு:-
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்) பகுதியில் உல்லால் ஏரி உள்ளது. இந்த ஏரி 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. தற்போது இந்த ஏரியை சுற்றியுள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிவிட்டனர். மேலும் ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஏரி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. ஏரியில் உள்ள நீர் படிப்படியாக குறைந்து வருவதால், ஏரி நீரில் வளர்ந்து வந்த மீன்கள் நூற்றுக்கணக்கில் செத்து மடிந்து கரை ஒதுங்கியுள்ளன. கடந்த சில நாட்களாகவே இவ்வாறு மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.
ஆனால் அந்த மீன்களை அகற்றவும், ஏரியை சுத்தப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏரியில் தண்ணீர் குறைந்து வருவதால் மீன்கள் செத்திருக்கலாம் என்றும், ஆய்வுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஏரிகள் பராமரிப்பு பிரிவு என்ஜினீயர் விஜயகுமார் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.