'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
மின் விளக்குகள் வேண்டும்
ஈரோடு பெருந்துறை ரோடு திண்டல் மேடு பகுதியில் இருந்து சென்னிமலை ரோடு, பூந்துறை ரோடு, கரூர் ரோடு வழியாக ஈரோடு 'ரிங் ரோடு' அமைந்து உள்ளது. இந்த ரோட்டில் 24 மணி நேரமும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இந்த ரோட்டில் சாலையோர மின் விளக்குகள் இல்லாததால் கடுமையான இருளாக உள்ளது. பாதசாரிகள் இந்த வழியாக செல்லும்போது இருள் காரணமாக தடுமாறுகிறார்கள். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே 'ரிங்' ரோட்டில் சாலையோர விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள், ஈரோடு.
பழுதடைந்த ரோடு
கோபி பஸ் நிலையம் அருகே ஈரோடு ரோட்டில் ரோடு குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
வெளியேறும் கழிவுநீர்
ஈரோடு ராஜாஜிபுரம் குப்பக்காடு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் கடந்த சில மாதங்களாக செல்வதால் அந்த இடத்தில் ஆபத்தான குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. எனவே பாதாள சாக்கடை குழியை சரிசெய்யவேண்டும்.
விநாயகம், ஈரோடு.
குண்டும், குழியுமான சாலை
பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சி 11-வது வார்டுக்கு உள்பட்ட பகுதி புதுக்காடையம்பட்டி அம்மன் கோவில் வீதி. இந்த வீதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள், மற்றும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்காடையம்பட்டி.
தெருவிளக்கு ஒளிருமா?
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராமம் தேவர்மலை. இங்குள்ள புட்டப்பனூர் தெருவில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எரியவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் அந்த தெருவில் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்குகளை எரிய வைக்க மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தேவர்மலை.
ஆபத்தான குழி
ஈரோடு சூளை பஸ் நிறுத்தம் முன்பு ஆபத்தான குழி உள்ளது. இந்த குழி குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக ஏற்பட்டு உள்ளது. இந்த குழியில் பலர் விழுந்து காயம் அடைந்து சென்று உள்ளனர். மேலும் இந்த ரோடு முக்கியமான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. எனவே இந்த குழியை மூட சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.