71வது உலக அழகி போட்டி: மகுடம் சூடினார் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா

71வது உலக அழகி போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்பவர் மகுடம் சூடியுள்ளார்.;

Update:2024-03-09 23:48 IST

மும்பை,

உலக அழகி போட்டி முதல்முறையாக இங்கிலாந்தில் 1951-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தியாவில் 1996-ம் ஆண்டு உலக அழகி போட்டி நடந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தது.

இதன்படி 71-வது உலக அழகி போட்டி கடந்த மாதம் 18-ந்தேதி டெல்லியில் தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி இன்று (9-ந்தேதி) மும்பையில் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இறுதிப்போட்டியை இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 பேர் கலந்து கொண்டனர். இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்று இருந்தனர். இந்தியாவை தவிர்த்து மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், வேல்ஸ், துனிசியா, போட்ஸ்வானா, கவுதமாலா, ஜிப்ரால்டர் நாடுகளை சேர்ந்த அழகிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இந்நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை வென்றார். லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார்.

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்டினார்.

 

இந்தியா சார்பில் பங்கேற்ற சினி ஷெட்டி, போட்டியின் முதல் 4 இடங்களுக்குள் வர முடியவில்லை. சினி ஷெட்டி, 2022-ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார்.

முன்னதாக உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்று உள்ளது. இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷி சில்லார் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்