சுகாதாரம், கல்வித்துறை கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் அபாயம் சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை
சுகாதாரம், கல்வித்துறை, தகவல் தொடர்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் அதிநவீன வைரஸ் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
புதுடெல்லி,
சுகாதாரம், கல்வித்துறை, தகவல் தொடர்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் அதிநவீன வைரஸ் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
நவீன அறிவியல், தொழில் நுட்பத்தின் வளர்ச்சி எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. அந்த வகையில், கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்மறை விளைவாக எடுத்துக்கொள்ளலாம்..
இது 'ரான்சம்வேர்' தாக்குதல் (சைபர் தாக்குதல்) என அழைக்கப்படுகிறது. வைரஸ் தாக்குதல்களில், 'ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல்' முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல்களில் அத்துமீறி நுழைகிற 'ஹேக்கர்'கள், பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால் 'ரான்சம்வேர்' வைரஸ் தாக்குதலில், கம்ப்யூட்டர் அமைப்பையே விஷமிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பயன்படுத்த முடியாமல் முடக்கி விடுகின்றனர். எளிய முறையில் சொல்வதென்றால் கம்ப்யூட்டருக்கு பூட்டு போட்டு விடுகின்றனர். இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் பிணைத்தொகையாக பிட்காயின்கள் தர வேண்டும் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது.
இந்த நிலையில், நம் நாட்டில் தகவல் தொடர்பு, சுகாதாரம், கல்வி துறைகளிலும், தனிநபர்களின் கம்ப்யூட்டர்களில் அதிநவீன 'ராயல் ரான்சம்வேர்' வைரஸ் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனம் (செர்ட்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்த அமைப்பு கூறியதாவது:-
இந்த 'ராயல் ரான்சம்வேர்' வைரஸ் முதன்முதலாக 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
இந்த வைரஸ், உற்பத்தி, தகவல் தொடர்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்புகளையும், தனிநபர்களின் கம்ப்யூட்டர் கட்டமைப்புகளையும் குறி வைத்து தாக்கும் அபாயம் உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் கம்ப்யூட்டர்களில் உள்ள கோப்புகளை மறைகுறியாக்கம் (என்கிரிப்ட்ஸ்) செய்து விடுவார்கள். இந்தக் கோப்புகளை திறந்து பார்க்க முடியாமல் போய் விடும். இதை மீட்டெடுப்பதற்கு, பாதிக்கப்பட்டவர்களிடம் வைரஸ் தாக்குதல் நடத்தியவர்கள் பெருந்தொகையை பிட்காயின்களாக கேட்கிறார்கள்.
அப்படி பிணைத்தொகையைத் தராவிட்டால், கோப்பில் உளள தரவுகளை பொதுவெளியில் கசியவிட்டு விடுவோம் என்று மிரட்டுவார்கள்.
இவ்வாறு சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே இந்த தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.