தலை துண்டித்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த முதலை
ரோனா தாலுகாவில் தலை துண்டித்த நிலையில் தண்டவாளத்தில் பிணமாக முதலையின் உடல் கிடந்தது.;
கதக்:
கதக் மாவட்டம் ரோனா தாலுகா ஒலேலூர் கிராமம் அருகே ரெயில் தண்டவாளம் ஒன்று உள்ளது. இந்த தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முதலை ஒன்று செத்து கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ரோனா ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தண்டவாளத்தில் தலையில்லாமல் கிடந்த முதலை உடலை அங்கிருந்து அகற்றினர். விசாரணையில் அந்த பகுதியில் உள்ள மல்லபிரபா ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற சமயத்தில் அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு செத்து இருக்கலாம் என தெரிந்தது. இதையடுத்து செத்துப்போன முதலையை அந்த பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.