பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பு; பண்டிகை கொண்டாட்டத்தின்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் - பிரதமர் மோடி

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-12-26 00:02 GMT

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா இந்த ஆண்டு (2022) சற்று ஓய்ந்து இருந்தது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

மீண்டும் பரவும் கொரோனா

சீனாவின் உகான் நகரில்தான் முதலில் கொரோனா தோன்றியது. தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா (பி.எப்.7) பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி விட்டது. இந்தியாவிலும் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் மாநில அரசுகளை அறிவுறுத்தி இருந்தது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி கடந்த 22-ந்தேதி தலைநகர் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

விமான பயணிகளுக்கு சோதனை

இதன்படி தொற்று பரவல் அதிகம் இருக்கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களிலும் நேற்று முன்தினத்தில் இருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஆண்டின் கடைசி 'மன் கி பாத்" (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திரமோடி நேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பண்டிகை கொண்டாட்டம்

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை கொண்டாட்டத்துக்காக வெளியில் சென்று வருவார்கள். அந்த சமயங்களில் முககவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை கடைபிடித்து அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

நாம் கவனமாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம். நமது பண்டிகை மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது. மத்திய அரசும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 220 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து பேசியதாவது:-

2022-ம் ஆண்டின் சிறப்புகள்

'மன் கி பாத்'தின் 96-வது அத்தியாயத்துக்காக ஒன்றுகூடி இருக்கிறோம். இது இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சி. விடைபெறும் 2022-ம் ஆண்டு பற்றி பேசுமாறு கூறி இருக்கிறீர்கள். கடந்த காலத்தை பற்றி பேசுவது, நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தயார்படுத்திக்கொள்ள உதவும்.

2022-ம் ஆண்டுதான், நாட்டின் 75-வது சுதந்திர தினம் நிறைவடைந்துள்ளது. நூற்றாண்டை நோக்கிய அமிர்த காலம் ெதாடங்கி இருக்கிறது. இந்த ஆண்டில்தான் பொருளாதாரத்தில் 5-வது இடத்தை இந்தியா எட்டி உள்ளது.

ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை (ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் கோடி) தாண்டி உள்ளது. நாட்டின் முதலாவது விமானம் தாங்கி கப்பல் 'விக்ராந்த்' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விண்வெளி, டிரோன் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியாவின் புகழ் பரவியது. விளையாட்டு துறையில், காமன்வெல்த் போட்டிகளிலும், பெண்கள் ஆக்கி போட்டியிலும் இந்தியா சாதித்தது. ஒவ்வொரு துறையிலும் தனது வலிமையை காண்பித்தது.

ஒற்றுமையை பறைசாற்ற 'காசி தமிழ் சங்கமம்' போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 'வீடுதோறும் தேசிய கொடி' ஏற்றும் நிகழ்ச்சியில், 6 கோடிக்கு மேற்பட்டோர் தேசிய கொடியுடன் 'செல்பி' எடுத்து போட்டனர்.

ஜி20 தலைமை பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் இயக்கமாக மாற்ற பாடுபடுவோம்.

மார்பக புற்றுநோய்க்கு யோகா தீர்வு

இன்று (நேற்று) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், போதனைகளையும் நினைவுகூரும் நாள். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்,

யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளால் கிடைக்கும் பலன்கள் நமக்கு தெரிந்தாலும், அதை நிரூபிப்பதற்கு ஆதாரபூர்வமான ஆராய்ச்சி இல்லாதது ஒரு குறையாக உள்ளது. இந்தநிலையில், மும்பையில் உள்ள டாடா மெமோரியல் சென்டர், மார்பக புற்றுநோயாளிகளுக்கு யோகா நன்கு பலன் அளிப்பதாக ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபோல், ஒற்றை தலைவலி, இதய நோய், மன அழுத்தம், உறக்கமின்மை, கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு யோகா மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், சின்னம்மை, போலியோ போன்றவற்றை ஒழித்துள்ளோம்.

ஐ.நா. தேர்வு செய்த கங்கை திட்டம்

8 ஆண்டுகளுக்கு முன்பு கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை தொடங்கினோம். இன்று, சூழலியலை பாதுகாப்பதற்கான 10 முன்னணி திட்டங்களில் ஒன்றாக இத்திட்டத்தை ஐ.நா.தேர்வு செய்துள்ளது. இத்திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகத்துக்கே புதிய வழியை காட்டப் போகிறது.

நமது கலை, கலாசாரம் குறித்து புதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அந்தவகையில், லட்சத்தீவில் உள்ள 'கும்மல் பிரதர்ஸ் சேலஞ்சர்ஸ் கிளப்' என்ற அமைப்பு, உள்ளூர் இளைஞர்களுக்கு பாரம்பரிய கலைகளை கற்றுத்தருகிறது.

அதுபோல், கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் வசித்து வரும் கியுமாஸ்ரீ, கடந்த 25 ஆண்டுகளாக, கர்நாடக கலை, கலாசாரத்துக்கு புத்துயிரூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

100-வது அத்தியாயம்

மூங்கில் தொடர்பான ஆங்கிலேயர் சட்டத்தை ரத்து செய்த பிறகு, மூங்கிலுக்கு பெரிய சந்தை உருவாகி உள்ளது. மூங்கிலை வைத்து பல்வேறு பொருட்களை தயாரிக்கிறார்கள். கர்நாடக மாநிலம் சிவமோகாவை சேர்ந்த சுரேஷ், அவருடைய மனைவி மைதிலி ஆகியோர் பாக்கு மட்டையை பயன்படுத்தி, கைப்பை, செருப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள். நாம் இதுபோன்ற உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதுடன், மற்றவர்களுக்கு பரிசளிக்க வேண்டும்.

நாம் 100-வது அத்தியாயத்தை நெருங்கி வருகிறோம். அதில் என்ன பேசப்போகிறோம் என்பதை அறிய பலரும் ஆவலாக உள்ளனர். அதில் என்ன பேசலாம் என்று உங்கள் யோசனைகளை அனுப்பி வையுங்கள்.

அடுத்த தடவை, 2023-ம் ஆண்டில் சந்திப்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்