புறநகர் ரெயில்வே திட்ட பணிகளுக்காக 268 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி
பெங்களூருவில் புறநகர் ரெயில்வே திட்ட பணிகளுக்காக 268 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது.
பெங்களூரு:
மரங்களை வெட்ட அனுமதி
பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மெட்ரோ ரெயில் சேவை இருந்தாலும் கூட நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. போக்குவரத்து பிரச்சினையை குறைக்க பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த புறநகர் ரெயில் திட்டத்திற்காக 661 மரங்களை வெட்ட உள்ளதாகவும், இதற்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பையப்பனா கிராமத்தில் இருந்து சிக்கபானவாரா வரை புறநகர் ரெயில் பாதை அமைப்பதற்காக 268 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
268 மரங்களை வெட்ட மக்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை என்றும் மாநகராட்சி கூறியுள்ளது. 661 மரங்களில் 315 மரங்களை பராமரிக்கவும், 58 மரங்களை வேறு இடத்திற்கு மாற்றவும் முடிவு செய்து உள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது. மரங்கள் வெட்டப்பட உள்ளது குறித்து மாநகராட்சியின் வனத்துறை அதிகாரி சரீனா கூறுகையில், 'மரங்களை வெட்ட மக்களிடம் இருந்து ஆட்சேபனை இல்லாவிட்டாலும் முடிந்த அளவுக்கு மரங்களை பாதுகாப்பது மாநகராட்சி மற்றும் வனத்துறையின் பொறுப்பு. பல்லாரி ரோட்டில் உள்ள அரண்மனை மைதானம் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு 50-க்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் வந்தன' என்றார்.
பெங்களூரு தெற்கு பகுதி மக்கள் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெங்களூரு வடக்கு பகுதி மக்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் பெங்களூரு வடக்கில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மாநகராட்சியின் சாலை மற்றும் உள்கட்டமைப்பு தலைமை என்ஜினீயர் பிரகலாத் கூறியுள்ளார்.