ஜப்பான் பிரதமருக்கு கொரோனா: விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி டுவிட்

கொரோனாவில் இருந்து ஜப்பான் பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-21 12:33 GMT

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை கதி கலங்க வைத்துவிட்டது. தொற்று பரவலால், சுகாதார நெருக்கடி மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளும் ஊரடங்கு விதித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதால் உலக நாடுகள் கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்தை நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருக்கிறது. எனினும், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதற்கிடையில் ஜப்பான் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை தடுக்க அந்நாட்டு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து, புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் "எனது நண்பர் ஜப்பான் பிரதமர் புமியோ ஷிகிடா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்