ஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையில் இந்திய பொருளாதாரத்தை சித்தரிக்கும் வகையில் இடம்பெற்ற படத்தால் சர்ச்சை
இந்திய பொருளாதாரம் குறித்து ஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையில் இடம்பெற்ற சித்தரிப்பு படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 'லா வான்கார்டியா' என்ற வாராந்திர பத்திரிக்கையில், கடந்த அக்டோபர் 9-ந்தேதி இந்திய பொருளாதாரத்தைப் பற்றிய கட்டுரை வெளியாகியிருந்தது. இதற்காக அந்த பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் இடம்பெற்ற சித்தரிப்பு படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் மகுடி ஊதும் ஒரு பாம்பாட்டியின் படம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை கலாச்சார ரீதியில் கேலி செய்யும் வகையிலும், மேற்கத்திய ஆதிக்க மனநிலையிலும் இந்த சித்தரிப்பு புகைப்படம் வரையப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் வலுவான பொருளாதாரம் உலக அங்கீகாரத்தைப் பெற்றாலும், சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் நமது அடையாளத்தை பாம்பாட்டிகளைப் போல் சித்தரிப்பது வெறும் முட்டாள்தனம். காலனி மனநிலையை நீக்குவது கடினமான செயல்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வரும் பலர் இது ஒரு இனரீதியான வெறுப்புணர்வு மனநிலை என்றும், இந்தியாவின் கலாச்சாரம் குறித்து மேலை நாடுகள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் விமர்சித்து வருகின்றனர். மேலை நாட்டினர் நம்மை எவ்வாறு சித்தரித்தாலும், நமது பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.