காங்கிரஸ் தலைவர் பதவி; இந்தி தெரிந்தவர்கள் தான் வர வேண்டும் என்றால் தேர்தல் மூலம் வரட்டும் - சசிதரூர் எம்.பி.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இந்தி தெரிந்தவர் தான் வரவேண்டும் என்றால் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக வரட்டும் என்று சசிதரூர் எம்.பி. கூறினார்.;
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரை தேர்வு செய்ய இந்த மாத இறுதியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யான சசிதரூர் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இதற்கிடையே மாநில தலைவர் சுதாகரன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு சசிதரூர் தகுதியானவர் என கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிதரூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
"தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்க வில்லை. இன்னும் நாட்கள் இருக்கிறது. அது தொடர்பாக ஒரு நிலையான முடிவு எடுக்கப்படும். ஜனநாயக நாட்டில் கட்சியின் தலைவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்வது நல்ல செயல் திட்டம்.
கட்சியில் ஓட்டுரிமை பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களித்து தலைவரை தேர்வு செய்யட்டும். இந்தி தெரிந்தவர்கள் தான் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்றால், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெற்று தலைவராக வரட்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.