அதானி குழுமங்களின் மீதான குற்றச்சாட்டுகளை ஆர்பிஐ, செபி விசாரிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கக் கோரி ரிசர்வ் வங்கி மற்றும் செபி தலைவர்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம் அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அஞ்சுவதற்கோ பா.ஜனதாவிடம் எதுவும் இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
இந்நிலையில் அதானி குழுமங்கள் மீதான நிதி முறைகேடு மற்றும் பங்கு கையாளுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் செபி தலைவர் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தான் எழுதிய கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதானி குழுமத்தின் "அதிகப்படியான கடன் நிலை" இந்திய வங்கி அமைப்புகளை தற்போதும் எதிர்காலத்திலும் பாதிக்காது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
செபியின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதானி குழுமம் வெட்கமின்றி முறைகேடாக பங்குகளை கையாண்டிருக்கும் விதம் பல்வேறு இந்திய சட்டங்கள் மற்றும் செபியின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அதானி குழுமத்தின் எண்ணிக்கை மற்றும் அரசியல் தொடர்புகள் காரணமாக, இதுபோன்ற விசாரணைகள் செல்வாக்கு மிக்க வணிக நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக செயல்படாமல், நேர்மையாகவும் முழுமையாகவும் நடைபெற வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.