'ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்தது அரசியல் சதி' - காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

தனிநபர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடுவது முதல்-மந்திரியின் வேலை அல்ல என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.;

Update:2024-01-25 09:04 IST

திஸ்பூர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் முதல் மும்பை வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் அசாம் தலைநகர் கவுகாத்தி செல்வதற்கு ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி முன்னேறினர். இதனை போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே யாத்திரையின்போது வன்முறையை தூண்டியதாக ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்தது அரசியல் சதி என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்ய வேண்டியது காவல்துறையினரின் வேலை. தனிநபர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடுவது முதல்-மந்திரியின் வேலை அல்ல. இது ஒரு அரசியல் சதி. காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதற்கு அவர்கள் செய்யும் முயற்சி வெற்றியடையாது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்