'காங்கிரஸ் கட்சியின் சனாதன எதிர்ப்பு மனநிலை வெளிப்பட்டுள்ளது' - ஸ்மிரிதி இரானி

காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தை மீண்டும், மீண்டும் அவமதித்துள்ளது என ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.;

Update:2024-01-10 22:39 IST

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்தார். 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சனாதன எதிர்ப்பு மனநிலை வெளிப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கடவுள் ராமருக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் முகம் தற்போது நாட்டு மக்கள் முன்னிலையில் வெளிப்பட்டுள்ளது. கடவுள் ராமரை கற்பனை கதாபாத்திரம் என்று கோர்ட்டில் கூறிய காங்கிரஸ் கட்சி, கும்பாபிஷேக விழாவை புறக்கணித்ததில் ஆச்சரியமில்லை. 

சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தை மீண்டும், மீண்டும் அவமதித்துள்ளது. தற்போது கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை ஏற்க மறுத்ததன் மூலம் அவர்களின் சனாதன எதிர்ப்பு மனநிலை வெளிப்பட்டுள்ளது."

இவ்வாறு ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்