மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
பெங்களூருவில் நண்பருடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
பெங்களூரு:-
காதல் திருமணம்
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வருபவர் அகிலேஷ். இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அகிலேஷ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். அதாவது தனியார் திருமண தகவல் மையம் மூலமாக அகிலேசுக்கும், அந்த பெண்ணுக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறி
இருந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூரு ஜெயநகரில் வைத்து திருமணம் செய்து கொண்டு இருந்தனர்.
அகிலேசின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காகிநாடா ஆகும். திருமணமான புதிதில் தம்பதி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அகிலேசுக்கு மது குடிக்கு பழக்கத்துடன், போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போதைப்பொருள் பயன்படுத்தி விட்டும், போதையில் தனது மனைவிக்கு அகிலேஷ் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மனைவிக்கு பாலியல் தொல்லை
இந்த நிலையில், கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 13-ந் தேதி தனது வீட்டில் வைத்து அகிலேஷ் போதைப்பொருளை பயன்படுத்தி உள்ளார். அப்போது அவரது நண்பர் அபிலாசும் சேர்ந்து போதைப்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இதனால் போதையில் இருந்த அகிலேஷ் தனது நண்பருடன் சேர்ந்து மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், போததைப்பொருள் பயன்படுத்தும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் பயந்துபோன அந்த பெண் கணவர் மற்றும் அவரது நண்பரிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு ஓடினார்.
பின்னர் இதுபற்றி அந்த பெண் சுப்பிரமணியபுரா போலீஸ் நிலையத்தில் தனது கணவர், அவரது நண்பர் மீது புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். அதேநேரத்தில் அந்த பெண் அகிலேசுடன் வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த விவகாரம் பற்றி கூடுதல் தகவல் தெரிவிக்கும்படி அந்த பெண்ணுக்கு 4 முறை போலீசார் நோட்டீசு அனுப்பியும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கணவர், நண்பர் கைது
இதற்கிடையில், அந்த பெண்ணை சந்தித்து, அவருக்கு நடந்த கொடுமைகள் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு இருந்தனர். இதையடுத்து, நேற்று பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வைத்து பெண்ணின் கணவர் அகிலேஷ், அவரது நண்பர் அபிலேசை சுப்பிரமணியபுரா போலீசார் கைது செய்துள்ளனர்.
அதாவது பெண் புகார் அளித்து 8 மாதங்களுக்கு பின்பு கணவரும், அவரது நண்பரும் கைதாகி இருந்தார்கள். அவர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.