காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி குத்திக்கொலை: ஒருதலை காதலன் வெறிச்செயல்

கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கல்லூரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Update: 2024-04-19 05:23 GMT

பெங்களூரு,

கா்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் வித்யாநகரை சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேகா ஹிரேமட் (வயது 24). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அந்த கல்லூரியில் பெலகாவியை சேர்ந்த பயாஜ் (24) என்பவரும் பி.சி.ஏ. படித்து வந்தார்.

இந்த நிலையில் பயாஜ், நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர் தனது காதலை பலமுறை நேகாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பயாஜின் காதலை நேகா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் நேகாவை பயாஜ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் அவரை நேகா கண்டித்துள்ளார்.

இதனால் நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கல்லூரியில் நடந்த தேர்வில் நேகா கலந்துகொண்டார். தேர்வு எழுதிவிட்டு மதியம் நேகாவெளியே வந்தார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் நேகாவை சரமாரியாக தாக்கியதுடன், அவரை கீழே தள்ளி உள்ளார். அத்துடன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நேகாவை சரமாரியாக குத்தினார்.

இதில், தலை, கழுத்து, மார்பில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த நேகா சம்பவ இடத்திலேயே துடி, துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த கொலையை பார்த்து அங்கிருந்த மாணவ-மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வித்யாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னா் போலீசார் கொலையான நேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகளும் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது காதலிக்க மறுத்ததால் நேகாவை பயாஜ் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. நேகாவை பயாஜ், கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கல்லூரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சிகள் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது. இதற்கிடையே வித்யாநகர் போலீசார் பயாஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்