சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவர் சாவு

டி.நரசிப்புராவில் வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றபோது சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2022-10-31 20:29 GMT

மைசூரு:

சிறுத்தை தாக்கி சாவு

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா எம்.எல்.உண்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 20). இவர் மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் உக்கலகெரே கிராமம் அருகே வனப்பகுதியில் உள்ள மல்லிகார்ஜுன சாமி கோவிலுக்கு மஞ்சுநாத் சாமி தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது வனப்பகுதியில் பாதி தூரம் சென்ற நிலையில், அவரது குறுக்கே சிறுத்தை ஒன்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும், அதற்குள் மஞ்சுநாத் மீது சிறுத்தை பாய்ந்து தாக்கியது. மேலும் அவரை சிறுத்தை கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது.

கிராம மக்கள் கோரிக்கை

இந்த நிலையில் மஞ்சுநாத் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், வனப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் ரத்த காயங்களுடன் மஞ்சுநாத் பிணமாக கிடந்தார். அப்போது தான், சிறுத்தை அவரை அடித்து கொன்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், மஞ்சுநாத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனா். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அந்தப்பகுதி மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், பலியான மஞ்சுநாத்தின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்