பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.30 கோடி கொகைன் சிக்கியது

ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு, விமானத்தில் கடத்தி வந்த ரூ.30 கோடி கொகைன் சிக்கியது. இதுதொடர்பாக பெண் பயணி கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2023-05-29 18:45 GMT

தேவனஹள்ளி:

ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு, விமானத்தில் கடத்தி வந்த ரூ.30 கோடி கொகைன் சிக்கியது. இதுதொடர்பாக பெண் பயணி கைது செய்யப்பட்டு உள்ளார்.

விமானத்தில் கடத்தல்

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் சர்வதேச கெம்பேகவுடா விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பயன்படுத்தி தங்கம், போதைப்பொருட்களை சில கும்பல் கடத்தி வருகின்றன. அவ்வாறு வருபவர்கள் குறித்து கிடைக்கும் தகவல்களின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களை கைது செய்து வருகின்றனர்.

எனினும், கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பெங்களூரு விமான நிலைய, சுங்க துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து விமானம் ஒன்று தரையிறங்கியது.

பெண் பயணி

மேலும் அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்றனர்.

மேலும் அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் கொகைன் எனப்படும் போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. இதுகுறித்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆப்பிரிக்காவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்து பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது.

ரூ.30 கோடி

இதையடுத்து அந்த பெண் பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். இதுதொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

முன்னதாக அவரிடம் இருந்த 2 கிலோ கொகைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.30 கோடி என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்