"காட்டுமிராண்டித்தனமான செயல்" : மணிப்பூர் சம்பவத்துக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்துக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-07-20 21:51 GMT

கோப்புப்படம்

கொல்கத்தா,

மணிப்பூரில் மெய்தி, குகி இனத்துக்கு இடையே 2 மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள காங்போபி மாவட்டத்தில் குகி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த மே 4-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு நேற்று முன்தினம் வெளியானதால், இந்த கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மனித தன்மையற்ற இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை கடுமையாக சாடியுள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'ஒரு வெறிப்பிடித்த கும்பல் 2 பெண்களை கொடூரமாக நடத்தும் மணிப்பூரின் கொடூரமான வீடியோவைக் கண்டு மனம் உடைந்து, ஆத்திரம் ஏற்படுகிறது. விளிம்புநிலைப் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளால் ஏற்படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் புரிந்து கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது' என ஆவேசமாக குறிப்பிட்டு இருந்தார்.

சமூக விரோதிகளின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி தாக்கு

மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ள ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியையும் குற்றம் சாட்டியுள்ளார். அந்தவகையில், இந்த விவகாரம் 140 கோடி இந்தியர்களுக்கு அவமானம் எனக்கூறியிருந்த பிரதமரை அவர் குறை கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பிரதமரே இந்த பிரச்சினை நாட்டுக்கு அவமானம் என்பதல்ல. மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் வலியும், அதிர்ச்சியும்தான் பிரச்சினை. வன்முறையை உடனே நிறுத்துங்கள்' என சாடியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:- பெண்கள் மானபங்க வீடியோ, நாட்டின் மனசாட்சியை உலுக்கி விட்டது. 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்தபோதிலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது. இதற்கு பிரதமர் மோடி முன்வந்து பொறுப்பேற்க வேண்டும்.

இது உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதால் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. எப்படியாவது அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்