வங்கியில் இருந்து பேசுவதாக கூறி விவசாயியிடம் ரூ.3¼ லட்சம் மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி விவசாயியிடம் மர்மநபர் ரூ.3¼ லட்சத்தை மோசடி செய்துள்ளார்.

Update: 2023-09-21 18:45 GMT

உடுப்பி-

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி விவசாயியிடம் மர்மநபர் ரூ.3¼ லட்சத்தை மோசடி செய்துள்ளார்.

வங்கி மேலாளர்

உடுப்பி மாவட்டம் படுபித்ரி எல்லைக்கு உட்பட்ட எருமாலு பகுதியை சேர்ந்தவர் சங்கர் கவுடா. இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில் சங்கர் கவுடா விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது செல்போன் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்தது.

அதில், பேசிய நபர் தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும், உங்களது வங்கி கணக்கு முடங்கி உள்ளது. எனவே அதனை உடனே சரிசெய்ய வேண்டும் என கூறினார். மேலும் உங்களது எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்ணை கூற வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை சங்கர் கவுடா நம்பியுள்ளார். இதையடுத்து அவரது எண்ணிற்கு ஓ.டி.பி. எண் வந்தது. அந்த எண்ணை மர்மநபருக்கு கூறினார்.

ரூ.3¼ லட்சம் மோசடி

பின்னர் சிறிது நேரத்தில் சங்கர் கவுடா வங்கி கணக்கில் இருந்து ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சங்கர் கவுடா அந்த நபரை தொடர்பு கொண்டார். அப்போது அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதுகுறித்து சங்கர் கவுடா படுபித்ரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களையும் தேடி வருகிறார்கள்.

வங்கியில் இருந்து யாரும் பொதுமக்களுக்கு தொடர்பு கொண்டு பேசமாட்டார்கள். எனவே பொதுமக்கள் யாரும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணத்தை பறிக்கும் கும்பலிடம் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்