பா.ஜனதா பிரமுகர் படுகொலை சம்பவத்துக்கு முதல்-மந்திரி கண்டனம்

பா.ஜனதா பிரமுகர் படுகொலை சம்பவத்துக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-27 14:35 GMT

பெங்களூரு;

144 தடை உத்தரவு

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே உள்ள நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார்(வயது 32). பா.ஜனதா பிரமுகரான இவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தட்சிண கன்னடா மாவட்ட புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவானே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரவீன் படுகொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை இக்கொலை சம்பவம் தொடர்பாக 10 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் சிலருக்கு இக்கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அவர்களையும் விரைவில் பிடித்து விடுவோம். வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. எங்களுக்கு சில துப்புகளும் கிடைத்துள்ளன. பதற்றம் நிலவுவதையொட்டி சுள்ளியா, புத்தூர், பெல்தங்கடி, கடபா ஆகிய தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


முதல்-மந்திரி கண்டனம்

இதற்கிடையே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரவீன் படுகொலை செய்யப்பட்டது குறித்து பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரவீன் படுகொலை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மேலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதே தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கூறுகையில், 'சம்பவம் நடந்த இடம் கேரளா எல்லைக்கு அருகே அமைந்துள்ள பகுதியாகும். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கேரளா போலீசார் மற்றும் அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மக்கள் அமைதி காக்க வேண்டுகோள்

இச்சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கி இவ்வழக்கில் தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தும்படி என்னிடம் கூறினார். மூத்த கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் மங்களூருவுக்கு விரைவில் அனுப்பப்படுவார்.

அவர் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார். இச்சம்பவத்தால் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த 2 மாவட்டங்களிலும் அமைதி நிலவ போலீசார் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்.

ஒரு உயிரை கொன்றால் அனைவருக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும். இருப்பினும் மக்கள் அமைதி காக்க கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தனிப்படைகள் அமைத்து...

இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரியான சுனில்குமார், பிரவீன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த படுகொலை சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை உள்துறை மந்திரி அரக ஞானேந்திராவிடம் ஒப்படைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்