ராஜஸ்தான், மேற்கு வங்காள சம்பவங்களை மணிப்பூர் கொடூரத்துடன் ஒப்பிடுவதா? - பாஜக மீது ப.சிதம்பரம் தாக்கு

ராஜஸ்தான், மேற்கு வங்காள மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை மணிப்பூர் சம்பவத்துடன் மத்திய அரசு ஒப்பிடுவதை ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

Update: 2023-07-23 23:16 GMT

புதுடெல்லி,

ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை மணிப்பூர் சம்பவத்துடன் மத்திய அரசு ஒப்பிடுவதை முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். அவற்றை வைத்து எப்படி மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறையை மன்னிக்க முடியும்?' என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் அவர், 'பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தானில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், நிச்சயமாக மாநில அரசுகளை வலுவான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துங்கள். ஆனால் மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மாநிலங்களின் நிலைமையுடன் மணிப்பூரின் நிலைமையை எப்படி ஒப்பிட முடியும்? என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், மத்திய அரசு திறமையற்று, பக்கச்சார்புடன் இருப்பது மட்டுமின்றி, கேவலமான ஒப்பீடுகளின் திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும்போது அது இரக்கமற்றதாகவும், கொடூரமானதாகவும் தெரிவதாக சாடியுள்ளார். மணிப்பூர் அரசு செயலற்று இருப்பதாகவும், மத்திய அரசு தன்னைத்தானே கோமா நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்