ராஜஸ்தான், புதுச்சேரியை தொடர்ந்து கட்சி தலைவராக ராகுல்காந்தியை நியமிக்கக்கோரி சத்தீஷ்கர் காங்கிரஸ் தீர்மானம்
காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில், தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் 310 மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது.
ராய்பூர்,
காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடக்க உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வருகிற 24-ந் தேதி தொடங்கவுள்ளது. காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்கக்கோரி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில், தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் 310 மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது. அதில், ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்கக்கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் முன்மொழிந்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்கம் உள்ளிட்டோர் வழிமொழிந்தபின், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பூபேஷ் பாகல் கூறுகையில், ஒவ்வொரு மாநில காங்கிரசும் தீர்மானம் நிறைவேற்றினால், ராகுல்காந்தி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.