மின்சாரத்தை சேமிக்க அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம் - பஞ்சாப் அரசு அறிவிப்பு
மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்து உள்ளது.
சண்டிகார்,
பஞ்சாப்பில் அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகரித்து உள்ளது. எனவே மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்து உள்ளது.
அதன்படி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும் என முதல்-மந்திரி பகவந்த் சிங் மன் அறிவித்து உள்ளார்.
இதன் மூலம் 300 முதல் 350 மெகாவாட் வரையிலான மின்சாரம் சேமிக்கப்படும் எனக்கூறிய அவர், பொதுமக்களும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்னரே அரசு அலுவலகங்களில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.