சந்திரயான்-3; மனித குலம் அனைத்திற்கும் உரிய சாதனை... பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

சந்திரயான்-3 விண்கலத்தின் சாதனை மனித குலம் அனைத்திற்கும் உரிய சாதனை என ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-08-24 09:16 GMT

ஜோகன்னஸ்பர்க்,

நிலவில் உயிர் வாழ கூடிய சாத்தியம், அதற்கான சூழல், ரசாயன பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்வதற்கான பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பல நூற்றாண்டுகளாக இதுவரை யாரும் செல்லும் திறனற்ற நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி பூமியில் இருந்து அனுப்பப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், பின்னர் நேற்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது.

தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பியது. அதில், இந்தியா, இலக்கை நான் அடைந்து விட்டேன். நீங்களும் கூட! என்று தெரிவித்தது.

இந்த வெற்றி ஒரு மறக்க முடியாத தருணம் என்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்கள் வந்தே மாதரம் என்று கோஷங்களையும் எழுப்பினர்.

அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவாகி உள்ளது. எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

தொடர்ந்து, லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சாதனையை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. பல நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் 15-வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி சந்திரயான்-3 விண்கல வெற்றியை பற்றி இன்று பேசும்போது, எங்களுக்கு இது ஒரு பெருமைக்கான விசயம். இந்த சாதனையானது, மனித குலம் அனைத்திற்கும் உரிய சாதனை என ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த வரலாற்று தருணத்தில், வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் உலகின் விஞ்ஞான சமூகத்திற்கு, இந்தியா, அதன் மக்கள் மற்றும் எங்களுடைய விஞ்ஞானிகள் சார்பாக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்